×

பாஜவின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம்: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து நேற்று பகல் 12 மணி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம், புதுச்சேரி உட்பட தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதி, 22 சட்டமன்ற ெதாகுதியில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியடையும். இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இந்திய தேர்தல் வரலாற்றில் பாரபட்சமாக ஒருதலைபட்சமாக நடுநிலை தவறி ஆளுகின்ற பாஜ அரசுக்கு கைப்பாவையாக தேர்தல் ஆணையம்  செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 274 இடங்களில் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது நயவஞ்சகமான செயல். இது தமிழகத்துக்கு செய்யப்படும் பச்சை துரோகம். காவிரி டெல்டா பகுதிகள் அனைத்தும் வறண்டு நஞ்சை விளைநிலங்கள் பாழாகிவிடும். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் போய்ச் சேரும். ஆனால், தமிழகத்தின் பெரும்பகுதி அழிந்துபோகும்.

இதை எதிர்த்து, தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்துக்காக முதலமைச்சர் பழனிசாமியின் அரசு கொடூரமான முறையில் 13 பேரை சுட்டுத்தள்ளியது. அதற்கான ஓராண்டு நினைவுநாள் வருகிறது. அதில் இறந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த கூட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெறப்பட்டது. இதேபோல், பேச்சு உரிமைக்கு கூட தடை போடுவது, வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பதற்கு பாசிச வெறியாட்டமே காரணம். கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. வரலாற்று உண்மையைத்தான் அவர் கூறினார். ஆனால் அவர் மீது செருப்பு, முட்டை வீசியது அக்கிரமம். இதை பாஜ தலைமை ஏன் கண்டிக்கவில்லை. கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீசச் செய்வது அநாகரீகமான செயல். இந்த அநாகரீகமான அரசியலுக்கு, ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டிவிடும் செயலை கண்டிக்கிறேன்.

Tags : Election Commission of India ,Vaiko , Bhajan, puppet, Election Commission, Vaiko
× RELATED எடப்பாடிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு